01.எங்கிருந்து கிடைத்தது அறிவு?
"முஹம்மத் நபி (ஸல்) அவர்களது பிறப்பிற்கு முன்னரே தந்தை மரணித்து விடுகிறார்கள். தாம் கல்வி பெற வேண்டிய வயதில் தாயார் ஆமினாவும் மரணித்து விடுகிறார்கள். இவர்களது வாழ்நாளில் கல்வியறிவூட்டிய ஆசிரியர்களாகவும் எவருமே இருந்ததில்லை. இதனால் இவர்கள் எழுதவோ வாசிக்கவோ தெரியாதவர்களாகவே வாழ்ந்தார்கள். அவ்வாறே இவர்களது இறை தூதுத்துவம் 40வது வயதில் கிடைக்கும் வரை சமூகசீர்திருத்தம் குறித்து எவர்களுடனும் பேசிக்கொண்டிருந்ததற்கான ஆதாரங்களை எவராலும் எங்கு தேடியும் துளியும் பெறமுடியாது; மாறாக இக்கருத்துக்கு எதிரான ஆதாரங்களையே சேகரிக்க முடிகிறது. ஆக அறிவு புகட்ட மாதா, பிதா, குரு என்ற யாரும் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு இருந்ததில்லை. வாசித்தறியும் ஆற்றலுமிருந்ததில்லை கேள்வி ஞானமும் இருந்ததில்லை."
முஹம்மத் நபி (ஸல்) அவர்களைப்பற்றிய இக்கூற்றுக்கள் இன்றைய அனைத்து வரலாற்று ஆய்வாளர்களாலும் ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களாகும். பகிரங்கமாக எதிர்ப்பவர்களும் கூட இதற்கெதிரான தமது வாதங்களை நிறுவ முடியாது மௌனிக்கவே செய்கின்றனர். இவைகளை உறுதிப்படுத்த பலமான ஆதாரங்கள் உள்ளதே இவற்றுக்கு காரணமாகும். அவைகளிலொன்று ; முதலில் கடுமையாக எதிர்த்து நின்ற அன்றைய மக்களுக்கு மத்தியிலேயே முஹம்மத்(ஸல்)அவர்களை எழுத வாசிகத் தெரியாதவர், எதுவுமே அறிந்திராத "உம்மி" என திருக்குர்ஆன் அடையாளப்படுத்தி இருந்தது
"அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம். (29:48)"
(நபியே!) நீர் கூறுவீராக "மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் - ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியாத நபியாகிய அவன் தூதரின் மீதும் நம்பிக்கைக் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் - அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்."(7:158)(இன்னும்-11:49/7:158/62:2/4:164)
இவ் இறை வசனங்களில் சிறிதளவும் சந்தேகமில்லாதிருந்த காரணத்தினாலேயே இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் முஹம்மத்(ஸல்)அவர்களது வாழ்நாளிலேயே இறைத்தூதராக அவர்களை அங்கீகரித்தார்கள். அவர்களுக்காக இவ்வுலக செல்வ சுகங்களையெல்லாம் துறக்கும் துணிவையும் பெற்றார்கள். எதிர் கருத்துக்கொண்டவர்களது விதண்டாவாதத்தை தகர்த்தெறிய இவ்வாதாரம் ஒன்றே போதும் என கருதுகிறேன்.
அல்லாஹ் அத்தாட்சிப்படுத்தியுள்ள முஹம்மத்(ஸல்) அவர்களது வாழ்வை ஆதாரமாகக் கொண்டு இன்னும் பல கேள்விகளுக்கு நாம் விடை தேட வேண்டியுள்ளது.
- பாலைவனத்தில் வாழ்ந்த படிப்பறிவே இல்லாத சாதாரண மனிதரால் எவ்வாறு இன்றைய நவீன உலகம் வியக்கும் திருக்குர்ஆனைத் தர முடிந்தது?
- இன்றைய விஞ்ஞானம் மெய்பித்து நிற்கும் உண்மைகளை ஆறாம் நூற்றாண்டில் இவர்களால் எவ்வாறு துல்லியமாக கூற முடிந்தது?
- எவ்வாறு இவர்களால் முன்னைய வேதங்களையும் வரலாறுகளையும் கச்சிதமாகவும் அவைகளை விட விரிவாகவும் கூற முடிந்தது?
- அண்ட பால் மண்டலங்களின் ஒழுங்குகளைப் பற்றியும், முள்ளந்தண்டிலிருந்து உருவாகும் விந்தணு பற்றியும், பசும் மரத்திலிருந்து இறைவன் தீயை உண்டாக்கினான் என்றும் எவ்வாறு இவர்களால் கூற முடிந்தது?
- இவ்வாறு சிக்கலான விடயங்களையெல்லம் கூறியதுடன் நில்லாது; இவைகளனைத்தும் இறைவனது வசனங்களேயன்றி வேறில்லை முடிந்தால் பொய்ப்பித்துக் காட்டுமாறு எவ்வாறு இவர்களால் சவால் விட முடிந்தது?
- எவ்வாறு இவர்களால் இன்றைய உலகில் நிரூபிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள முன்னறிவிப்புகளையெல்லாம் கூற முடிந்தது?
- எவ்வாறு இவர்களால் பெரும்சட்ட வல்லுனராக முடிந்தது?
- எவ்வாறு இவர்களால் பெரும் சாம்ராஜ்யத்தையே நிர்வகிக்கவும் வழிகாட்டவும் முடிந்தது?
- எவ்வாறு இவர்களால் உன்னத பொருளியல் கோட்பாடுகளை கூற முடிந்தது?
- எவ்வாறு இவர்களால் முழு மனித வாழ்க்கைக்குமே வழிகாட்ட முடிந்தது?
- மொத்தத்தில் மனித உள்ளங்களை எவ்வாறு இவர்களால் பக்குவபடுத்த முடிந்தது?
அல்ஹம்துலில்லாஹ்(எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கேயுரியது). இக்கேள்விகளைப் போன்ற இன்னும் அனைத்து கேள்விகளுக்கும் முஃமீன்களினது பதில் "வணங்கத்தகுந்த நாயன் அல்லாஹ்வேயன்றி வேறில்லை; அவனது திருத்தூதரே முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்" என்பதாகும்.
"உங்களுக்கு நிச்சயமாக நாம் ஒரு வேதத்தை அருளியிருக்கின்றோம்; அதில் உங்களின் கண்ணியம் இருக்கின்றது. நீங்கள் அறிய மாட்டீர்களா? (குர்ஆன்-21:10)"
02.ஆலோசனைகளை வழங்கியது யார்?
"மனிதனானவன் அடுத்த மனிதனை ஏதாவது ஒரு விதத்தில் சார்ந்திருக்கவே வேண்டும்" என்பதே இறை நியதி. அவனே உலகின் தனிப்பெரும் அறிவாளியாக இருந்தாலும் சரியே அவன் அறியாத அடுத்த துறையும் இருக்கவே செய்யும். அப்பெரும் அறிவாளி அடுத்த துறையினுள் நுழையும் போது அத்துறை சார்ந்தவனை துணைக்கழைக்கவே வேண்டும். இதுவே இன்றைய தினம் வரை வரலாறு தரும் பாடமும், இறைவன் ஏற்படுத்தியுள்ள நியதியுமாகும்.
"பொருளாதார மேதைக்கு நிர்வாகங்கள் பற்றி தெரிந்திருப்பதில்லை, இராணுவ மேதைக்கு அரசியல் தெரிந்திருப்பதில்லை. ஏன் உயிரியல் விஞ்ஞானிகளுக்கு பௌதீகவியல் விஞ்ஞானம் தெரிந்திருப்பதில்லை."
உலகில் வாழ்ந்து சென்ற அனைவரும் இவ்வாறு அடுத்தவர்களின் துணையின் அவசியத்துடன் வாழ்ந்தவர்களே. ஆனால் மனித சரித்திரத்தில் ஒருவரைத் தவிர; அவர்கள்தான் மனிதர்களது ஒவ்வொரு வினாடிஅசைவுக்கும் வழிகாட்டிச்சென்ற அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாகும்.
இத்தனைக்கும் இவர்கள் சாதாரணமான ஆன்மீகவாதி மட்டுமல்ல.
அன்றைய பெரும் வல்லரசான உரோம சாம்ராஜ்யத்துக்கு நிகராக இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை தலைமைதாங்கி வழி நடாத்திய அரசியல் தலைவர்.
தமது மக்களுக்காக களமிறங்கி காவல் புரிந்த மாபெரும் இராணுவத்தளபதி.
நூற்றாண்டுகள் பல கடந்து இன்றும் நிலைத்து நிற்கும் சட்டங்களை இயற்றியவர்.
இன்றும் போற்றப்படும் பொருளியல் கோட்பாடுகளை உலகிற்கு தந்தவர்.
இன்னும் உலகின் அனைத்து துறைகளையும் அசாதாரணமாக அலசியவர்.
உலகின் இன்றைய முதன்மை துறைகளையெல்லாம் இஸ்லாத்தின் கீழ் கொண்டு வந்த அதிசய மனிதர்.
இவ்வாறு அல்லாஹ் அத்தாட்சிப்படுத்தியுள்ள முஹம்மத்(ஸல்) அவர்களது சாதனைகளை ஆதாரமாகக் கொண்டு இன்னும் பல கேள்விகளுக்கு நாம் விடை தேட வேண்டியுள்ளது.
- இன்றைய நூற்றாண்டின் உலகின் பாதிப்பேர்களினது வாழ்வுக்கு வழிகாட்டியாக வாழ்ந்து சென்றுள்ள, வாழ்வுக்கான வரையறைகளை காட்டி சென்றுள்ள முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு ஆலோசனைகள் கொடுத்தவர்கள் யார்?
- அன்றைய உலகின் தனிப்பெரும் வல்லரசான ரோம சாம்ராஜ்யமே ஆட்டங்காணுமளவு ஆட்சிநடத்திய இவர்களுக்கு ஆலோசனைகள் கொடுத்தவர்கள் யார்?
- அன்றைய உலகில் மட்டுமல்ல கடந்த நூற்றாண்டு வரை எழுச்சியுற்றிருந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் நிர்வாகத்திற்கான கரு எங்கிருந்து எடுக்கப்பட்டது?
- மேலும் இவர்களுக்கு நவீன விஞ்ஞான உலகாலும் பொய்ப்பிக்க முடியாத விஞ்ஞான ஆலோசனைகள் வழங்கியது யார்?
- மேலும் பொருளியல் ஆலோசனைகளை வழங்கியது யார்?
- மேலும் இராணுவ ஆலோசனைகளை வழங்கியது யார்?
"முஹம்மத்(ஸல்) அவர்களது ஆலோசனைகள் உலக மக்களில் பாதியளவானோருக்கு இன்று அவசியமாகின்ற நிலையில், இவ்வளவு சாதனைகளையும் புரிந்தவருக்கு எந்த துறையிலும் எந்த மனிதரது ஆலோசனைகளும் தேவைப்பட்டிருக்கவில்லையே."
அல்ஹம்துலில்லாஹ்(எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கேயுரியது). இக்கேள்விகளைப் போன்ற இன்னும் அனைத்து கேள்விகளுக்கும் முஃமீன்களினது பதில் "வணங்கத்தகுந்த நாயன் அல்லாஹ்வேயன்றி வேறில்லை; அவனது திருத்தூதரே முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்" என்பதாகும்.
(நபியே!) நீர் (இறைவனால் அனுப்பப்பட்ட) தூதர் அல்லர் என்று நிராகரிப்பவர்கள் சொல்கிறார்கள்; எனக்கும், உங்களுக்குமிடையே சாட்சியாக இருக்க அல்லாஹ்வும், வேதஞானம் யாரிடமிருக்கிறதோ அவர்களும் போதுமானவர்கள்" என்று நீர் கூறிவிடுவீராக! (குர்ஆன்-13:43)
"மனித சமுதாயத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களின் மீது சர்ச்சைக்கிடமின்றி இன்று ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் ஒருவரின் மிகச்சிறந்த வாழ்க்கையை அறிந்திட நான் ஆவல்கொண்டேன். (அதை படித்தறியும் போது) இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஓர் இடத்தை பெற்றுத்தந்தது வாள் பலமல்ல என்று முன்னெப்போதையும் விட அதிகமாக நான் உணர்ந்தேன். நபிகள் நாயகத்தின் மாறாத எளிமை, தம்மை பெரிதாக கருதாமல் சாதாரணமானவராக நடந்து கொள்ளும் உயர் பண்பு, எந்நிலையிலும் வாக்குறுதியை பேணி காத்த தன்மை, தம் தோழர்கள் மீது அவர் கொண்டிருந்த ஆழிய அன்பு, அவரது அஞ்சாமை, இறைவன் மீதும் தமது பிரச்சார பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவைதாம் அவரது வெற்றிக்குக் காரணங்கள். இவையே உலக சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும் அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டு வந்து குவித்தன. எல்லாத்தடைகளையும் வெற்றி கொண்டன. அவரது மகத்தான வெற்றிக்கு இவைதாம் காரணமே தவிர வாள் பலம் அல்ல."
"உயர்ந்த இலட்சியம், குறைவான வசதிகள், வியப்பூட்டும் வெற்றி ஆகிய இம்மூன்றும் தான் மனித நுண்ணறிவை, மனித ஆற்றலை அளந்திடும் அளவுகோல்கள் என்றால் இந்த நவீன வரலாற்றின் எந்த மாமனிதரையும் "முகம்மத்" உடன் ஒப்பிட எவருக்குத்தான் துணிச்சல் வரும்? புகழ் மிக்க மனிதர்களெல்லாம் ஆயுதங்களை உருவாக்கினார்கள்; சட்டங்களை இயற்றினார்கள்; பேரரசுகளை நிறுவினார்கள். அவர்கள் செய்ததெல்லாம் இவைதாம்! பெரும்பாலும் தமது கண்களின் முன்பே சிதைந்து விழுந்துவிட்ட உலகாயதக் கோட்டைகளைத்தான் அவர்களால் நிறுவ முடிந்தது. ஆனால் முகம்மத் போர்ப்படைகள், சட்டமியற்றும் சபைகள், பேரரசுகள், மக்கள் சமுதாயங்கள் ஆகியவற்றை மட்டும் பாதித்து அவற்றை மட்டும் வெற்றி கொள்ளவில்லை; அவற்றுடன் அன்றைய உலகின் மூன்றிலொரு நிலப்பரப்பில் வசித்து வந்த கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களையும் ஈர்த்தார். வழிபாட்டுத் தலங்களையும், சமய நெறிகளையும், பல்வேறு கருத்துகளையும், கொள்கைகளையும், நம்பிக்கைகளையும் ஆன்மாக்களையும் ஈர்த்து அவற்றில் தமது தாக்கங்களை பதித்தார். வெற்றியின் போது அவர் காட்டிய பொறுமை, பணிவு, சகிப்புத்தன்மை தாம் ஏற்றுக்கொண்ட ஒரு கருத்துக்காக தம்மையே முழுமையாக அர்பணித்துக்கொண்ட அவரது உயர் விருப்பம், அரசாட்சியை அடைந்திட வேண்டும் என்ற குறுகிய எண்ணம் இல்லாமல் உலகபற்றற்று வாழ்ந்து வந்த நிலை, அவரது முடிவில்லாத தொழுகைகள், பிரார்த்தனைகள், இறைவனுடனான மெய்ஞ்ஞான உரையாடல்கள் அவரது மரணம், மரணத்திற்கு பின்னரும் அவர் அடைந்த வெற்றி இவையனைத்துமே அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்றோ மோசடி குணம் உடையவர் என்றோ பறை சாற்றிட வில்லை. மாறாக, சமயக்கொள்கை ஒன்றை நிலை நாட்டிட அவருக்கிருந்த மனோ உறுதியைத்தான் பறைசாற்றுகின்றன."
"உலகில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் முதன்மையானவராக, முகம்மதை நான் தெரிவு செய்தது சில வாசகர்களுக்கு வியப்பையும், வினாவையும் எழுப்பலாம். சமயஞ் சார்ந்த மற்றும் சமயச்சார்பற்ற வட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றவர் மனித சரித்திரத்தில் அவர் ஒருவரே.
"அவர் ஒரே நேரத்தில் போப்பும் சீசரும் ஆவார்; ஆனால் அவர் போப்பின் பகட்டுகள் ஆடம்பரங்கள் எதுவுமில்லாத போப் ஆவார். சீசரின் பாதுகாப்பு படைகள் எதுவுமில்லாத சீசராவார். தயார் நிலையிலுள்ள இராணுவமோ நிலையான நிர்ணயமான வருமானமோ இல்லாமல் வெறும் இறைவனின் இசைவாணையை தெய்வீக அனுமதியை மட்டுமே துணையாக கொண்டு ஆட்சி புரிந்ததாக கூறிக்கொள்ளும் உரிமை மனித வரலாற்றில் எவராவது ஒருவருக்கு இருக்குமானால் அவர் முஹம்மத் ஸல் அவர்களேயாவார். ஏனெனில் ஆட்சி அதிகாரம செலுத்திட தேவையான கருவிகள் துணைச்சாதனங்கள் எதுவுமில்லாமலேயே அதிகாரங்கள் அனைத்தையும் அவர் பெற்றிருந்தார்."
"முஹம்மத்(ஸல்) அவர்கள் தமது கொள்கைகளுக்காக எல்லாவித சித்திரவதைகளையும் கொடுமைகளையும் சகித்துக்கொண்டு அவர்களைத் தமது தலைவராக கருதிய அவர்களின் தோழர்களுடைய உயர்ந்த ஒழுக்க பண்புகளும் அவர்கள் இறுதியில் நிகழ்த்திய சாதனையின் மகத்துவமும் இவையனைத்துமே அவர்களின் அடிப்படையான நேர்மையை நம்பகமான தன்மையை நன்கு எடுத்துரைக்கின்றன. அவர்களை ஏமாற்றுக்காரராகவும் மோசடிக்காரராகவும் கருதுவது இன்னும் பல பிரச்சனைகளையும் கேள்விகளையும் எழுப்புகிறதே தவிர பிரச்சனைகள் தீர்க்கக்கூடியதாக இல்லை. மேலும் உலக வரலாற்றில் மேற்குலகில் முஹம்மதைப்போல் தவறாக புரிந்து கொள்ளப்பட்டவர்கள் வேறெவருமில்லை"
"அவர் தமது மார்க்கத்தை பிரச்சாரம் செய்தது வியப்புக்குரியதல்ல. மாறாக என்றும் நீடித்து நிலைத்திருக்கும் பாங்குதான் வியப்புக்குரிய ஒன்றாகும். மக்கா நகரிலும் மதீனா நகரிலும் அவர் வடித்தளித்த இஸ்லாத்தின் அதே அசல் வடிவம் தூய்மை கெடாமல் மாற்றப்படாமல் திரிக்கப்படாமால் பன்னிரெண்டு நூற்றாண்டுகளாக நடந்தேறிய புரட்சிகள் பலவற்றிற்கு பிறகும் இன்று வரை இந்திய ஆபிரிக்க துருக்கிய பகுதிகளில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. சமயத்தைக்குறித்து கற்பனை மற்றும் ஊகத்தின் அடிப்படையிலான கருத்தோட்டங்களிலிருந்து இஸ்லாமியர்கள் ஒதுங்கியே இருந்தனர். அவற்றை அடியோடு கிள்ளி எறிந்தும் விட்டார்கள். 
"அரேபியாவின் இந்தத்தூதருடைய வாழ்க்கையையும் ஒழுக்கப் பண்புகளையும் தூய நடத்தைகளையும் படிப்பவர்கள் அவர் எப்படி வாழ்ந்தார் என்பதை அறிந்தவர்களுக்கு அந்த வல்லமை மிக்க மாபெரும் இறைத்தூதர்களில் ஒருவரான இறுதித்தூத ரை க் குறித்து உயர்வான எண்ணமே ஏற்படும் எனது இந்த நூலில் நான் பல ருக்கும் தெரிந்த பல விடயங்களையே சொல்லியிருக்கிறேன். என்றாலும் நானே அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை த் திரும்ப த்திரும்ப படிக்கும் ஒவ்வொரு முறையும் ஆற்றல் மிக்க அரபு போதகரின் மீது மதிப்பும் புதிய மரியாதை உணர்வும் ஏற்படுவதைக் காண்கிறேன்."